தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்-ன் தவெக 107 இடங்களைக் கைப்பற்றி எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த அரசியல் மாற்றம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தவெகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளது. அதாவது தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களிலும், திமுக 74 இடங்களிலும், அதிமுக 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் முதல்முறையாக தீவிர அரசியல் களத்திலும், சட்டமன்றத்திலும் காலடி எடுத்து வைக்கும் தவெகவினருக்கும் எனது நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்களில் கணிசமானவர்கள் தங்கள் தீர்ப்பை எழுதியிருக்கிறார்கள். அதை பணிவோடு ஏற்றுக்கொள்வோம். ஒருவிதத்தில் தமிழகத்திற்குள் நுழைய பாஜக செய்த அனைத்து முயற்சிகளையும் நமது மக்கள் முறியடித்திருக்கிறார்கள். ஆட்சியில் இருந்த திமுக எதிர்க்கட்சி ஆகியிருக்கிறது. கூட்டணி பின்னடைவை சந்தித்திருக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களின் தனிப்பட்ட தோல்வி நிச்சயம் வருத்தத்திற்குரியதுதான். ஆனால் அதை எதிர்கொள்கிற நெடிய அரசியல் அனுபவம் அவருக்கு உண்டு என்று நம்புகிறேன்.

காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு மிகவும் வேதனையளிக்கிறது. ஆனால் காங்கிரஸ் பேரியக்கம் எவ்வளவோ சவால்களை சந்தித்து மீண்டு வந்திருக்கிறது. இதிலிருந்தும் மீளும். கூட்டணியின் சார்பாக வெற்றிபெற்றுள்ள அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். விஜய் அவர்களின் தவெக குறுகிய காலத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில் பாரம்பரியமாக அரசியலில் நம்பப்படும், வாக்குச் சாவடி கமிட்டி, மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு சார்ந்த விசயங்களை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. ஒரு முற்றிலும் மாறுபட்ட அரசியல் அணுகுமுறையை தமிழ்நாட்டு மக்கள் ஆதரித்திருக்கிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான அரசியலாகக் கூட இருக்கலாம்.

விஜய் அவர்கள் புதிய கட்சியின் தலைவராக இருந்தாலும், இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு தொடர்ந்து எதிர்கொண்டு வருகிற நமது மாநில உரிமைகள், நமது மொழி, இனம், அடையாளம் , பண்பாடு, அரசியல் பிரதிநிதித்துவம் மீதான தாக்குதலை உறுதியோடு எதிர்கொள்ள வேண்டிய சவால் அவர் முன்னும் உள்ளது. அதில் அவர் வெற்றிபெற வேண்டும் என்றே தமிழ்நாடு நினைக்கும். த.வெ.கவின் தலைவர் விஜய் அவர்களுக்கும், முதல்முறையாக தீவிர அரசியல் களத்திலும், சட்டமன்றத்திலும் காலடி எடுத்து வைக்கும் தவெகவினருக்கும் எனது நல்வாழ்த்துகள். வெற்றி, தோல்வியைத் தாண்டி, தமிழ்நாட்டின் மீதான பாஜகவின் தாக்குதலை எதிர்கொள்ள ,தமிழ்நாட்டின் நலன்காக்க அனைத்து அரசியல் கட்சிகளும்.தொடர்ந்து களத்தில் நிற்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.