Asianet News TamilAsianet News Tamil

பெண்கள் மீது அக்கறை செலுத்தும் திமுக அரசு.. மகளிர் மேம்பாட்டுக்காக செயல்படுத்திய திட்டங்கள் பற்றிய ஒரு பார்வை!

திமுக ஆட்சிக்கு வந்து மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆன போது அவர் கையெழுத்திட்ட 5 கோப்புகளில் ஒன்று தான் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம். இந்த திட்டத்தின் கீழ் சுமார் 39.21 லட்சம் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதாக கூறப்படுகிறது. 

DMK government that cares about women
Author
First Published Dec 29, 2022, 11:53 AM IST

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், அவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் நலனை கருத்தில் கொண்டும் பல மகளிர் மேம்பாட்டு திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின்  செயல்படுத்தியுள்ளார். அதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

* மகளிர் மேம்பாட்டு திட்டங்கள்: 

இலவச பேருந்து பயண திட்டம்

புதுமைப்பெண் திட்டம்

பெண் அர்ச்சகர் திட்டம்

மகளிர் குழு கடன் தள்ளுபடி

*  இலவச பேருந்து பயண திட்டம்: 

திமுக ஆட்சிக்கு வந்து மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆன போது அவர் கையெழுத்திட்ட 5 கோப்புகளில் ஒன்று தான் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம். இந்த திட்டத்தின் கீழ் சுமார் 39.21 லட்சம் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டம் மூலம் மிச்சம் ஆகும் பணம் வீட்டுச் செலவுக்கு பயன்படுவதால், பெண்கள் இந்த திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

DMK government that cares about women

*  புதுமைப்பெண் திட்டம்: 

தமிழ்நாட்டில் பெண்களின் உயர்கல்விப் படிப்பை உறுதி செய்யும் வகையில் புதுமைப் பெண் திட்டம் அறிவிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தும். அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள்  தங்களது வறுமை காரணமாக இடையில் உயர்கல்வியை நிறுத்தாமல், தொடர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்  முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த ஊக்கத்தொகை திட்டத்தை கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி அறிவித்தார். உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் 1000 ரூபாய் இந்தத் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு வழங்கப்படும். இந்தத் தொகை நேரடியாக மாணவிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.

DMK government that cares about women

*  பெண் அர்ச்சகர் திட்டம்:

முன்னதாக முதல்வராக கருணாநிதி இருந்த போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை 1970 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றினார். ஆனால் அந்த சட்டம் பல்வேறு காரணங்களால் நிறைவேற்ற முடியாமல் போன நிலையில் 51 வருடங்களுக்குப் பின் தற்போது முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் அதனை நிறைவேற்றியுள்ளார். அதிலும் குறிப்பாக பெண்களும் இதில் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் கரூரை சேர்ந்த சுஹாஞ்சனா என்பவர் சேலையூரை அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். 

* மகளிர் குழு கடன் தள்ளுபடி:

அடுத்ததாக திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிக்கு வந்த பின்னர் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கூட்டுறவு நிறுவனங்களால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,674.64 கோடி கடனை தள்ளுபடி செய்து திமுக அரசு அரசாணை வெளியிட்டது. 

* பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களுக்கு விலக்கு:

பெண் காவலர்கள் சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போது அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இயற்கை உபாதைகளை கழிக்க கூட இடமில்லாமல் கடும் சிரமத்தை சந்தித்து வந்த நிலையில் அவர்களின் துயரை நீக்கும் வகையில் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

DMK government that cares about women

இவ்வாறு மகளிர் மேம்பாட்டுக்கென திமுக அரசு பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி பெண்களின் நலனில் அக்கறை செலுத்தும் அரசாக திகழ்ந்து வருவதுடன், பெண்களை பாதுகாக்கவும் அவர்களை ஊக்குவிக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios