DMK Durai Murugam statement

திமுக தலைவர் கருணாநிதி குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அரசு இணையதளத்தில் கருத்து பதிவு செய்து இருந்தார். இதற்கு, திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கடும் கண்டம் தெரிவித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து, துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மறைந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடும் நேரத்தில் அரசு இணைய தளத்தை பயன்படுத்தி திமுக தலைவர் கருணாநிதி மீது அவதூறு பரப்பியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.

தேவையில்லாமல் கருணாநிதி மீது அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு முதல்வராக இருக்கக் கூடியவர் அரசு இணைய தளத்தை தனது சொந்த லாபத்துக்காகவும், சுயநல அரசியலுக்காகவும் பயன்படுத்துவது கேடு கெட்ட செயல். தனது ஊழலை எம்.ஜி.ஆர் முகமூடியை போட்டு மறைக்க முயற்சிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

நெடுஞ்சாலைத் துறையிலும், அதன் பிறகு இவர் வகித்த பொதுப்பணித் துறை, இப்போது வகிக்கும் முதல்வர் பதவி எல்லாவற்றிலும் எடப்பாடி பழனிச்சாமி ஒழுக்கம், நேர்மை வெட்ட வெளிச்சமாகி இப்போது வருமான வரித்துறை ரெய்டுகள், சேலம் மத்திய கூட்டுறவு வங்கி ரெய்டுகள், ஈரோட்டில் உறவினர் வீட்டில் நடைபெற்ற ரெய்டுகள், கூவத்தூரில் எம். எல்.ஏ.க்களுக்கு செய்யப்பட்ட பட்டுவாடாக்கள் எல்லாம் அணி வகுத்து நிற்கிறது என்பதை எடப்பாடி பழனிச்சாமி மறந்து விட வேண்டாம்.

இந்திய தேர்தல் ஆணையமே தேர்தலை நிறுத்தும் அளவிற்கு ஊழல் பணத்தை தொகுதி யில் பட்டியல் போட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னின்று விநியோகம் செய்து தமிழகத்திற்கு அகில இந்திய அளவில் அவமானத்தைப் பெற்றுத் தந்தது உலகிற்கே தெரிந்த உண்மை.

அப்படிப்பட்ட ஊழல் மகா பிரபுவான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் கருணாநிதியின் நேர்மை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?

கூவத்தூரில் கொண்டாட்டம் நிகழ்த்தி, நடனம் ஆடி, சட்டமன்றத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதல்வருக்கு கடமை, கண்ணியம் பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது?

லஞ்சம் வாங்கினார் என்று குற்றம் சாட்டப்பட்டு இன்று உச்ச நீதிமன்றத்தில் ஏன் வழக்கு தாக்கல் செய்யவில்லை என்று கண்டனத்திற்குள்ளான அமைச்சருக்கு முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி நேர்மை பற்றி பேசுவதற்கும் கடமை பற்றி பேசுவதற்கும் வெட்கப்பட வேண்டாமா?

அப்பழுக்கற்ற தலைவராக, மக்களை மதித்த தலைவராக, தமிழகத்தின் நலத்திட்டங்களையும், மிகப் பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களையும் நிறைவேற்றிய தலைவராக, தமிழக சட்டமன்றத்தில் வைரவிழா காணும் தலைவராக இருக்கும் கருணாநிதி பற்றி கருத்து கூறுவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு துளி கூட அருகதை இல்லை.

அரசு இணைய தளத்தை இதுபோன்ற அரசியல் நாகரிகமற்ற பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.