ஜெகன் பாண்டியனை திமுக வன்முறையால் வீழ்த்தியிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு
பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் சகோதரர் ஜெகன்பாண்டியன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அவரை வன்முறையால் வீழ்த்தியிருப்பதாக விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் சகோதரர் ஜெகன்பாண்டியன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அவரை வன்முறையால் வீழ்த்தியிருப்பதாக விமர்சித்துள்ளார்.
சகோதரர் ஜெகன்பாண்டியனை கடந்த மாதம், 'என் மண் என் மக்கள்' பயணத்தில் சந்தித்ததாவும் அண்ணாமலை நினைவுகூர்ந்திருக்கிறார். கட்சிப் பணிகளிலும் சமூகப் பணிகளிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வந்த அவரது நற்பண்புகளும் தன்னைக் கவர்ந்தன என்றும் தெரிவித்துள்ளார்.
நேரில் சென்று ஜெகன் பாண்டியன் உடலுக்கு மாலை அணிவித்து இரங்கல் தெரிவித்த அண்ணாமலை, அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பேசி ஆறுதல் கூறினார். பின்னர் அங்கே எடுக்கப்பட்ட போட்டோகளை இணைத்து ட்வீட் போட்டிருக்கிறார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது:
"திமுகவினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் சகோதரர் ஜெகன் பாண்டியன் அவர்கள் இல்லத்துக்குச் சென்று, அவரது தாயாருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தோம்.
சகோதரர் ஜெகன்பாண்டியன் இழப்பு, கட்சிக்கும் சமூகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. சகோதரர் ஜெகன்பாண்டியன் குடும்பத்தினருடன், பாஜக என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும், சகோதரர் ஜெகன்பாண்டியன் இடத்திலிருந்து பாஜக சார்பாக, அவரது தாயாருக்குச் செய்ய வேண்டிய கடமையாக, வீடு கட்டித் தருவோம் என்றும் உறுதியளித்தோம்.
சகோதரர் ஜெகன்பாண்டியன் அவர்களை கடந்த மாதம், என் மண் என் மக்கள் பயணத்தில் சந்தித்தபோது, கட்சிப் பணிகளிலும் சமூகப் பணிகளிலும் அவரது சுறுசுறுப்பும், நற்பண்புகளும் என்னைக் கவர்ந்தது.
பொதுமக்களிடையேயும் அவரது அயராத சமூகப் பணிகள் மூலம் குறிப்பிடத்தக்க இடம் பிடித்திருந்தார். அவர் வளர்ச்சியைக் கண்டு பயந்த திமுக, அவரை வன்முறையால் வீழ்த்தியிருக்கிறது. அவர் மரணத்துக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் எங்கே இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்பதைக் கூறிக் கொள்கிறேன்."
இவ்வாறு அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.