விழுப்புரம்

திமுகவின் மனிதச் சங்கிலி போராட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய திமுக கிளை செயலாளர் உளுந்தூர்பேட்டையை கடந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் புளிய மரத்தில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மார்க்கண்டன் (41). திமுக கிளைச் செயலாளரான இவர் திமுக சார்பில் விழுப்புரத்தில் நடந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

போராட்டம் முடிந்தபிறகு அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார் மார்க்கண்டன்.

உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள காம்பட்டு கிராம பேருந்து நிறுத்தம் அருகே சென்றது. அப்போது திடீரென இவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் மார்க்கண்டனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனைப் பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் மார்க்கண்டன் நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.