Asianet News TamilAsianet News Tamil

ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் விசிக-வினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம்...

DMK and visika opposes and demonstrated for Governor visit nagappatinam
DMK and visika opposes and demonstrated for Governor visit nagappatinam
Author
First Published Feb 19, 2018, 11:18 AM IST


நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் ஆய்வுப் பணிக்கு வந்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என்று எதிர் கட்சியினர் மற்றும் பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூய்மை இந்தியா திட்ட பணிகளை நேற்று பார்வையிட்டார். மேலும், ரேசன் கடை, திடக்கழிவு மேலாண்மை உரப்பூங்கா ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு மேற்கொள்வதற்காக நாகப்பட்டினம் சுற்றுலா மாளிகையில் இருந்து ஆளுநர் காரில் புறப்பட்டார். வெளிப்பாளையம் ஏழைப்பிள்ளையார் கோவில் அருகில் கவர்னர் கார் வந்தபோது, அங்கே கூடியிருந்த நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவருக்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆளுநருக்கு எதிராக பல்வேறு முழக்கங்களையும் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கௌதமன் தலைமை வகித்தார். மதிவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

இதில் நகர செயலாளர் போலீஸ் பன்னீர், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அறிவழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தி.மு.க.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தால் நாகையில் பலத்த காவல் பாதுகாப்பும், தி.மு.க.வினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைக்கு வந்துவிடாமல் இருக்க இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளும் போடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios