அமைச்சர் பொன்முடி ரெய்டு: கூட்டணி கட்சிகள் கண்டனம்; அதிமுக, பாஜக வரவேற்பு!
அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதற்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டு இறுதியில் அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடுகள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பொன்முடியின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. அதேசமயம், கலைஞர் தொலைக்காட்சி சி.இ.ஓ. கார்த்திக் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செம்மண் குவாரி தொடர்பாக, அமைச்சர் பொன்முடி மீது 2012ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சோதனை நடைபெற்று வருவதாகவும், மொத்தமாக ஐந்து இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், எதன் அடிப்படியில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது? சோதனைக்கான காரணம் என்பன உள்ளிட்டவைகள் குறித்து அமலாக்கத்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதற்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், அமலாக்கத்துறை மூலம் மிரட்டி அடிமைப்படுத்தலாம் என மத்திய பாஜக அரசு நினைக்கிறது. மத்திய அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன; என்றாவது அவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளதா? என கேள்வி எழுப்பினார். மேலும், தமிழ் மண்ணில் பாஜக தோல்வியடையும்; அமலாக்கத்துறை சோதனையால் மக்களிடையே எதிர்கட்சியினருக்கு செல்வாக்கு அதிகமாகும் எனவும் அவர் கூறினார்.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அடியாளாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். “அமைச்சர் பொன்முடி என்ன தவறு செய்தார்; அவர் மீது என்ன குற்றச்சாட்டு உள்ளது; அமலாக்கத்துறை சோதனை பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை.” என திமுக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
அதேசமயம், அமைச்சர் பொன்முடி மீதான அமலாக்க்கத்துறை சோதனைக்கு அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. “ஆதாரம் இல்லாமல் அமலாக்கத்துறை சோதனை நடத்தாது. தவறு செய்யவில்லை என்றால் அமைச்சர் பொன்முடி அதன்பை நிரூபிக்கப்பட்டும். அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் என்பது போல எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கும் அமலாக்கத்துறை சோதனைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.” என்று அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
“அமைச்சர் பொன்முடி சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.” என பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது மத்திய அரசின் பழிவாங்கல் நடவடிக்கையா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சொத்துக்குவிப்பு வழக்கு என்று சோதனை நடத்தப்பட்டது. அது எந்த நோக்கத்தில் நடத்தப்பட்டது. அது அரசியல் பழிவாங்குதல் இல்லையா?” என கேள்வி எழுப்பினார்.