தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் நேரிட்ட காட்டுத் தீயில் சிக்கி படுகாயம் அடைந்த ஈரோட்டைச் சேர்ந்த இளம் பெண் திவ்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 

ஈரோட்டைச் சேர்ந்த திவ்யாவுக்கும் விவேக் என்பவருக்கும் ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. 

இதையடுத்து திருமணமான 100 வது நாளை கொண்டாட இருவரும் தேனி குரங்கணி பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். 

அப்போது நேற்று முந்தினம் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி விவேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார். நேற்றுவரை காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்திருந்தனர். 

இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த பலர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அந்த வகையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யாவுக்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதையடுத்து காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.