பெரம்பலூர்

பெரம்பலூரில் கல்வி மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகளில் வலைகோல் பந்தாட்டம், கபடி, கோ-கோ, இறகுப்பந்து, ஹேண்ட்பால் ஆகிய போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. 

பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறையின் சார்பில் பெரம்பலூர், குன்னம் குறுவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்தது.

அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் கல்வி மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் நேற்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கின. முதல் கட்டமாக கால்பந்து, கைப்பந்து, எறிபந்து, மேசைப் பந்தாட்டம், கூடைப்பந்து, டென்னிஸ் ஆகிய குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

பெரம்பலூர் - குன்னம் குறுவட்ட போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெற்ற அணிகள் இந்த கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றன. 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

உடற்கல்வி ஆசிரியர்கள் தட்சிணாமூர்த்தி, அன்பரசு, சீனிவாசன், அரிவேல், சாந்தி, பழனியம்மாள், விக்டோரியா உள்ளிட்டோர் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினர்.

கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெற்ற அணியில் இடம்பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் முதல் இடம் பெற்ற அணிகள், கரூரில் நடைபெறவுள்ள மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

கல்வி மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகளில் வலைகோல் பந்தாட்டம், கபடி, கோ-கோ, இறகுப்பந்து, ஹேண்ட்பால் ஆகிய போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.