District Administration should not be permitted to set up a shop - Saamyappa Nagar people proposal

ஈரோடு

டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது என்று சாமியப்பா நகர் மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், சாமியப்பா நகரைச் சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட மக்கள் மனு கொடுப்பதற்காக நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:

“ஈரோடு பெரியவலசு நால்ரோடு பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த டாஸ்மாக் சாராயக் கடை பாரில் வைத்து ஆறு பேர் கொண்ட கும்பலை சேர்ந்தவர்கள் வாடகை கார் ஓட்டுநர் ஒருவரை கடந்த சில நாள்களுக்கு முன்பு கத்தியால் குத்தி கொலை செய்தனர். அதனைத் தொடர்ந்து அந்த டாஸ்மாக் சாராயக் கடை மூடப்பட்டது.

இந்த நிலையில் ஈரோடு பெரியவலசு நால்ரோடு பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடையை மாணிக்கம்பாளையம் சாலைப் பகுதியில் உள்ள சாமியப்பா நகரில் திறக்க தற்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த பகுதியில் 600–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு பள்ளிக்கூடம் மற்றும் கோவில்கள் உள்ளன. எனவே சாமியப்பா நகரில் டாஸ்மாக் சாராயக் கடை அமைத்தால் குடிமகன்களின் தொந்தரவால் பெண்கள், மாணவ, மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே ஈரோடு சாமியப்பா நகரில் டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது” என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து மக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கிற்கு சென்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.