Dissatisfaction with Supreme Court ruling Farmers who fought in the field ...

அரியலூர்

உச்சநீதிமன்றம் வழங்க சொல்லியுள்ள தண்ணீர் போதாது என்று அரியலூரில் விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் உள்ள பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது.

அந்த தீர்ப்பில், தமிழகத்திர்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தண்ணீர் தமிழகத்துக்கு போதுமானதல்ல என்று கூறி அரியலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ளது க.மேட்டுத்தெரு கிராம. இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் அங்குள்ள வயல் ஒன்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் மு.மணியன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டக்குழு வைத்திலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

உச்ச நீதிமன்றம் வழங்க சொல்லியுள்ள தண்ணீர் போதாது என்றும், கூடுதல் தண்ணீர் வேண்டும் என்றும் விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.