வேலூர்

வேலூரில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களை அசிங்கமாக திட்டி, மிரட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திடக்கழிவு மேலாண்மை ஊழியர்கள் 2-வது நாளாக வேலைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த அம்மணாங்கோயில் ஊராட்சி, புதுப்பேட்டை கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தினக் கூலி அடிப்படையில் அத்தியூர், முத்தனூர், காட்டூர் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

கடந்த 14-ஆம் தேதி புதுப்பேட்டை பகுதியில் சேகரித்த குப்பைகளை ஆத்துமேடு சந்தைப் பகுதி சுடுகாடு அருகே உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டியபோது, அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன், அவரது மகன்கள்  சீனிவாசன், கார்த்திகேயன் ஆகியோர் குப்பைகளைக் கொட்ட கூடாது என்று கூறி துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களை அசிங்கமாக திட்டியும், மிரட்டியும் உள்ளனர். 

இதுகுறித்து திடக்கழிவு பெண் பணியாளர்கள் தனித்தனியே வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு கொடுத்தனர். 

அதன்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர்அன்பரசன் பெண் தொழிலாளர்களை மிரட்டிய குமரேசன், சீனிவாசன், கார்த்திகேயன் ஆகிய மூவர் மீது நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த நிலையில் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த இரண்டு நாள்களாக திடக்கழிவு மேலாண்மை ஊழியர்கள் தங்களது வேலையைப் புறக்கணித்தனர். 

மேலும், நேற்று திடீரென புதுப்பேட்டையில் உள்ள ஊராட்சி அலுவலகம் எதிரே போராட்டத்திலும் ஈடுப்பட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.