ஆளுநரின் பாதுகாப்பு பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் செல்லப்பா விபத்தில் உயிரிழந்தார். 

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியின் கொழுக்கு மலைக்கு திருப்பூரில் இருந்தும் சென்னையில் இருந்தும் 26 பெண்கள், 8 ஆண்கள், 3 குழந்தைகள் உள்பட 40 பேர் இரு குழுக்களாக சென்றுள்ளனர்.

இந்த நிலையில், மலை ஏறி திரும்பும் போது அவர்கள் காட்டுத்தீயில் சிக்கியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நெல்லையில் இருந்து மதுரைக்கு பயணம் செய்தார்.  அவரின் பாதுகாப்பு பணிக்காக ராதாபுரம் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக இருந்த செல்லப்பா நெல்லையில் இருந்து மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். 

பணகுடி அருகே வந்து கொண்டிருந்த போது, செல்லப்பாவின் இருச்சக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் செல்லப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.