Asianet News TamilAsianet News Tamil

பத்து வருடங்களாக உதவித்தொகை கிடைக்காததால் வேதனையில் அசல் சான்றிதழ்களை ஒப்படைக்க வந்த மாற்றுத்திறனாளி…

disabled person came collector office to hand over the original certificates for not receiving the scholarship for ten years ...
disabled person came collector office to hand over the original certificates for not receiving the scholarship for ten years ...
Author
First Published Aug 1, 2017, 6:57 AM IST


கடலூர்

94 சதவீதம் ஊனம் அடைந்ததற்கான சான்றிதழ் இருந்தும் பத்து வருடங்களாக உதவித்தொகைக்கு விண்ணப்பித்தும், கிடைக்காததால் படித்த சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அசல் சான்றிதழ்களை ஒப்படைக்க மாற்றுத்திறனாளி ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கீழ்ஆதனூர் வடக்குதெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் செந்தில்குமார் (34). இவர் ஒரு மாற்றுத்திறனாளி.

இவர் தனக்கு அரசின் உதவித்தொகைக் கேட்டு திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக விண்ணப்பித்து வந்துள்ளார். ஆனால், இதுவரை ஒருமுறை கூட அவருக்கு உதவித்தொகைக் கிடைக்கவில்லை.

பின்னர் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனு மீதும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வேதனையடைந்த செந்தில்குமார் தான் படித்த சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, 94 சதவீதம் ஊனம் அடைந்ததற்கான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அசல் சான்றிதழ்களை ஆட்சியரிடம் ஒப்படைப்பதற்காக வந்தார்.

இதுபற்றி செந்தில்குமார் கூறியது:

“நான் 94 சதவீதம் மாற்றுத்திறனாளி. தமிழக அரசு வழங்கும் மாத உதவித்தொகை கேட்டு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக அலைகிறேன். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆட்சியரை சந்திப்பதற்காக நேற்று மாலை (அதாவது நேற்று முன்தினம்) 5 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டேன். இரவு 1 மணிக்கு கடலூர் பேருந்து நிலையம் வந்து, அங்கு தங்கி, இன்று (நேற்று) ஆட்சியரை சந்தித்து முறையிட வந்தேன்” என்றார்.

இதுபற்றி தகவலறிந்ததும் திட்டக்குடி தாசில்தார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, “இன்னும் ஒரு வாரத்தில் அரசின் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்று உறுதியளித்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட செந்தில்குமார் உதவித்தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இங்கிருந்துப் புறப்பட்டுச் செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டுச் சென்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios