ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் திடீர் திருப்பம்..! தலைமறைவாக இருந்த இயக்குனரை தட்டி தூக்கிய போலீஸ்
ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான தீபக் பிரசாத் என்பவரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆரூத்ரா மோசடி
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு செய்யும் பணத்திற்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறியும், ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 30 ஆயிரம் ரூபாய் வரை வட்டி தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடி செய்ததாக ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
முதலீடு செய்த பணத்தை தங்க வியாபாரத்தில் முதலீடு செய்து இரட்டிப்பாக லாபம் தருவதாக ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றியுள்ளனர். சுமார் ஒரு லட்சம் பேரிடம் 2438 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்ததாக 40 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் பாஜக நிர்வாகியாக இருந்த ஹரிஷ் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
பல ஆயிரம் கோடி மோசடி
இது தொடர்பாக தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூன் 20ஆம் தேதி ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரம் தொடர்பாக முதல் குற்ற பத்திரிக்கையை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் தமிழ்நாட்டு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
4000 பக்கம் அளவில் குற்ற பத்திரிக்கைகள் ஆதாரங்கள்,ஆவணங்கள் உள்ளிட்டவை அனைத்தையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சமர்ப்பித்தனர். இதில் நடிகர் ஆர் கே சுரேஷ் ரூசோ என்பவரிடமிருந்து 15 கோடி ரூபாய் பணத்தை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆருத்ரா நிறுவன மோசடியில் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளில் முகவர்களாக செயற்பட்ட 1500 பேரை அடையாளம் கண்டு அவர்களிடம் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆரூத்ரா இயக்குனர் கைது
அந்த அடிப்படையில் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் 500 முகவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் , இந்த முகவர்கள் 800 கோடி ரூபாய் வரை பொதுமக்களிடம் வசூல் செய்து மோசடி செய்திருப்பதால் அவற்றை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மோசடி வழக்கில், தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான தீபக் பிரசாத் என்பவரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். சென்னை போரூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சென்ற பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சென்னை அசோக் நகரில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
இலங்கை கடற்படையினர் மீண்டும் அத்துமீறல்..! ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் கைதால் பதற்றம்