எங்களிடம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தரவில்லை: ஆஸ்கர் இயக்குநர் மீது பொம்மன் - பெள்ளி தம்பதி குற்றச்சாட்டு
பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு ஒப்பந்தப்படி இழப்பீடு வழங்கப்பட்டது என்று தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற படத்திற்கு சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் சூட்டிங்கின்போது தங்களிடம் பணம் வாங்கியதாகவும், அதைத் திரும்பத் தரவில்லை என்றும் அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி குற்றம் சாட்டியுள்ளனர்.
பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், இயக்குநர் கார்த்திகி குறித்து அதிர்ச்சி அளிக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
“இயக்குநர் நாங்கள் படத்தில் நடிக்க பணம் தரவில்லை. திருமண காட்சியை படமாக்க தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். எனவே, எங்கள் பேத்தியின் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து சூட்டிங் செலவுக்குக் கொடுத்தோம். இயக்குநர் அந்தப் பணத்தை இன்னும் திருப்பி தரவில்லை. பணத்தைத் திருப்பிக் கொடுத்ததாகவும், எங்களுக்கு கார் மற்றும் நிலம் வாங்கித் தந்ததாகவும் அவர் கூறுவது அனைத்தும் பொய்" என்று கூறியுள்ளனர்.
படப்பிடிப்பிற்குப் பிறகு தான் மன அமைதியை இழந்ததாகவும் பெள்ளி குற்றம் சாட்டியுள்ளார். “படப்பிடிப்பின்போது, இயக்குநர் சொன்னதையெல்லாம் செய்தோம்; என் பேத்திக்கு கதை சொல்வது முதல் டீ போடுவது, துணி துவைப்பது, கும்கி யானைகளை குளிப்பாட்டுவது வரை அனைத்தையும் செய்தோம். இயக்குனர் எங்களுக்கு டீ கூட வாங்கித் தரவில்லை. திரைப்படத்தின் மூலம் நாங்கள் பெற்றதெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு வழங்கிய ரூ.1 லட்சம் மட்டுமே." எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கார்த்திகியை தொடர்புகொண்டு விசாரித்தபோது, பொம்மன் - பெள்ளி தம்பதியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். சனிக்கிழமை இரவு, ஆவணப்படத்தைத் தயாரித்த சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், நிறுவனம் மற்றும் இயக்குநர் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு ஒப்பந்தப்படி இழப்பீடு வழங்கப்பட்டது என்று கூறியுள்ளனர்.
"ஆஸ்கார் விருதை வெல்வது பணத்தின் அடிப்படையிலான பாராட்டு அல்ல. அது திரைப்படத் தயாரிப்பின் சிறப்பிற்கான அங்கீகாரமாகும். யானைகளைப் பாதுகாப்பதையும், வனத்துறை மற்றும் பாகன் தம்பதி பொம்மன் மற்றும் பெள்ளியின் மகத்தான வாழ்க்கையையும் முன்னிலைப்படுத்துவதே 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' உருவாக்கத்தின் குறிக்கோள். ஆவணப்படம் வெளியானதிலிருந்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பாகன் தொழில் செய்பவர்கள் மத்தியில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தியது,” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.