கொலக்கம்பை
மாவோயிஸ்டுகளை பிடிக்க தமிழக – கேரள எல்லையோர வனப்பகுதியில் உள்ள மக்களிடம் வீடு வீடாக நேரடி விசாரணை நடத்தி வருகின்றனர் துப்பாக்கியுடன் சுற்றுப் பணியில் ஈடுபட்டுள்ள காவலாளர்கள்.
நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே உள்ள நெடுகல்கம்பை ஆதிவாசி கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஏழு மாவோயிஸ்டுகள் புகுந்து பொதுமக்களிடம் உணவு பொருட்களை வாங்கி சென்றுள்ளனர்.
மேலும், அவர்கள் குடியிருப்பு பகுதியில் பல இடங்களில் துண்டு பிரசுரங்களை ஒட்டிச் சென்றனர்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து கொலக்கம்பை, குன்னூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் ஆதிவாசி கிராமங்களில் காவலாளர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் யாரும் சிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து தமிழக – கேரளா எல்லை பகுதியான அட்டப்பாடி, அகழி, முள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் காவலாளர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கேரள மாநில எல்லையோர பகுதியில் உள்ள முள்ளி கிராம பகுதியில் துப்பாக்கி ஏந்திய சிலர் வனப்பகுதியில் ஊடுவியதாக அந்த பகுதி மக்கள் காவலாளர்களுக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து காவலாளர்கள் தனிப்படை அமைத்து வனப்பகுதிகளில் தீவிர சுற்றுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மஞ்சூர் காவல் ஆய்வாளர் ராஜ்குமார், கொலக்கம்பை உதவி ஆய்வாளர் முரளி, மாவோயிஸ்டு ஒழிப்பு சிறப்பு உதவி ஆய்வாளர் ஐதர்அலி ஆகியோர் அடங்கிய 30-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் துப்பாக்கிகளுடன் வனப்பகுதியில் சோதனை செய்தனர்.
அவர்கள் மூப்பர்காடு ஆதிவாசி கிராமத்தில் இருந்து முள்ளி, கெத்தை, எல்.ஜி.பி. உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
