விழுப்புரம்

அமைச்சர் சி.வி.சண்முகத்தை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதால் அதிமுகவினர் டி.டி.வி.தினகரன் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக அம்மா அணிச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் சி.வி.சண்முகத்தை நேற்று முன்தினம் நீக்கி கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிரடி உத்தரவிட்டார்.

இதனைக் கண்டித்து விழுப்புரம் அருகே காணை பேருந்து நிறுத்தம் அருகே ஒன்றிய அதிமுக செயலாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் அதிமுக-வினர் டி.டி.வி.தினகரனை கண்டித்து அவரது உருவ பொம்மையை தீ வைத்து எரித்துப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் முன்னாள் ஒன்றியச் செயலாளர்கள் அரங்கநாதன், இளங்கோவன், கலியன், ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் மல்லிகா, கோலியனூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திருவேங்டம், கிருஷ்ணமூர்த்தி, சிவா, நாகராஜ், சரவணன், கிளை கழக செயலாளர்கள் காணை சக்திவேல், சேட்டு, பரந்தாமன், முருகன், ஆறுமுகம், செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

அதேபோன்று செஞ்சி கூட்டுரோட்டில் ஒன்றியச் செயலாளர் கோவிந்தசாமி தலைமையில் அதிமுகவினர் டி.டி.வி.தினகரன் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில், முன்னாள் அவைத் தலைவர் கண்ணன், மருத்துவ அணி மாவட்டச் செயலாளர் மருத்துவர் ராமசந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சோழன், மாணவரணி ஒன்றியச் செயலாளர் லட்சுமி காந்தன், இளைஞரணி நகர செயலாளர் சரவணன்,

இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், வார்டு செயலர் திருமலை, முன்னாள் நகர செயலாளர் நடராசன், பேரவை ஒன்றிய செயலாளர் பூங்குன்றம், இலக்கிய அணி பாலு, சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.