dinakaran demanding petition for bail
டிடிவி தினகரன் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடை தரகர்களாக செயல்பட்ட சுகேஷ் சந்திரா, நரேஷ் உள்பட சிலரையும் டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுப்பதற்காக டிடிவி.தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரா ஆகியோர் பலமுறை செல்போனில் பேசியுள்ளனர். அதன், குரல் பதிவை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதை தொடர்ந்து அவர்களது குரல் பதிவை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மேலும், குரல் பதிவை ஆய்வு செய்ய வேண்டும் என போலீசார், நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். அதற்கு டிடிவி.தினகரன், சுகேஷ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வரும் 29ம் தேதி வரை டிடிவி.தினகரனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், டிடிவி.தினகரன் ஜாமீன் கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு குறித்த விசாரணை, நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
