Asianet News TamilAsianet News Tamil

திருமணத்தில் மொய் எழுதுவதுபோல நூதன திருட்டு – புதுசு புதுசா கிளம்புறாங்களே…

different way of theft in marriage
different way of theft in marriage
Author
First Published Sep 5, 2017, 6:41 AM IST


தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடந்த திருமணம் ஒன்றில் மொய் எழுதுவதுபோல நூதன திருட்டில் ஈடுபட்ட பெண் உள்பட இருவரை காவலாளர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ளது கருப்பூர். இந்த ஊரைச் சேர்ந்த வீராசாமி மகன் நிருபனுக்கும், வினிதா என்பவருக்கும் கோவில்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலையில் திருமணம் நடைப்பெற்றது.

திருமணம் முடிந்ததும் திருமணத்திற்கு வந்தவர்கள் சாப்பிட்டு மொய் பணம் வழங்கினர். கருப்பூரைச் சேர்ந்த விஜயகுமார் (36) அந்த மொய் பணத்தை வசூலித்தார்.

வந்திருந்தவர்கள் நெடும் வரிசையில் நின்று மொய் பணம் வழங்கியதால், கூட்ட நெரிசலாக இருந்தது. அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், தான் ரூ.2 ஆயிரம் வழங்கியதாகவும் மொய்ப்பணம் ரூ.200 எடுத்துக் கொண்டு மீதி சில்லறை தருமாறும் விஜயகுமாரிடம் கேட்டார்.

கூட்ட நெரிசலில் சரியாக கவனிக்காத விஜயகுமார், அந்த நபர் ரூ.2 ஆயிரம் கொடுத்து இருக்கலாம் என்று கருதி அவரிடம் ரூ.200 மொய்ப்பணம் போக ரூ.1800-ஐ திருப்பி கொடுத்தார்.

சிறிது நேரத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தான் ரூ.2 ஆயிரம் வழங்கியதாகவும், மொய்க்கு ரூ.200 எடுத்துக்கொண்டு மீதி பணத்தை தருமாறு கேட்டார்.

அப்போது சுதாரித்துக் கொண்ட விஜயகுமார், அந்தப் பெண்ணிடம் நீங்கள் என்னிடம் பணமே தரல. அப்புறம் எப்படி நான் உங்களுக்கு சில்லறை தர முடியும் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

உடனே அந்தப் பெண் அங்கிருந்து நைசாக தப்பிச் செல்ல முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணையும், ஏற்கனவே 2 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக கூறி சில்லறை வாங்கிய நபரையும் பிடித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காவலாளர்கள், அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பாவலர் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த தனிகொடி (40) மற்றும் போஸ் மனைவி பிச்சையம்மாள் (50) என்பது தெரியவந்தது.

அவர்கள் இருவரும், திருமண மண்டபத்தில் மொய் பணத்துக்கு ரூ.2 ஆயிரம் கொடுத்ததாகவும், அதற்கு சில்லறை தருமாறும் கேட்டு நூதன திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் காவலாளர்கள் கைது செய்து, தனிகொடியிடம் இருந்த ரூ.1800-யும் பறிமுதல் செய்தனர்.

இதுவரை எத்தனை திருமண மண்டபங்களில் இதுபோன்று கைவரிசை காட்டி உள்ளனர்? என்று அவர்களிடம் காவவலாளரகளின் விசாரணை தொடர்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios