சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே கூட்டுறவு வங்கி செயலாளர், ஒரே சொத்தின் பேரில், மனைவி மற்றும் உறவினர்களுக்கு ரூ. 3 இலட்சம் கடன் பெற்றுள்ளார். ஆனால், விவசாயிகள் கடன் கேட்டால், தடையில்லா சான்றிதழ் பெற்று வா என்று அலைய விடுகிறார்கள்.

இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள், கடன் வழங்கக்கோரி கூட்டுறவு வங்கியை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். .

சத்தியமங்கலம் அருகே கெம்பநாயக்கன்பாளையத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கி மூலமாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன், கறவை மாடு வாங்க வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 1000–க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் வங்கி உறுப்பினர்களாக உள்ள 100–க்கும் மேற்பட்ட விவசாயிகள் திங்கள்கிழமை மதியம் 2 மணி அளவில் கெம்பநாயக்கன்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு வந்தனர். பின்னர், வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். மேலும், அதிகாரிகளை உள்ளே வைத்து வங்கிக்குப் பூட்டுப் போட்டு போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

அப்போது அவர்கள் கடந்த சில நாள்களாக கடன் பெற தகுதி உள்ள விவசாயிகளுக்கு கடன்கள் வழங்க வங்கி நிர்வாகம் மறுத்து வருகிறது. தடையில்லா சான்று பெற்று வர வேண்டும் என்று அலைய விடுகிறார்கள்.

ஆனால் வங்கி செயலாளர் தன்னுடைய உறவினர்கள் மற்றும் மனைவியின் பெயரில் ஒரே சொத்தின் பேரில் ரூ.3 இலட்சம் வரை கடன் பெற்று அரசு அறிவித்த பட்டியலில் தள்ளுபடியும் பெற்றுள்ளார். எனவே, அவர் மீது வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்கள்.

மேலும், கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வங்கி தலைவர் சேனாபதி அங்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ‘வங்கி செயலாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்படுவார்’ என்று உறுதி கூறினார். அதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

வங்கியை பூட்டி விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் சுமார் 4 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.