Asianet News TamilAsianet News Tamil

ரமணா பட பாணியில் இறந்து போனவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை; பணியில் மருத்துவர் இல்லாததால் இருவர் பலி…

died get treatment in government hospital like Ramana film Two died because of no doctor in work
died get treatment in government hospital like Ramana film Two died because of no doctor in work
Author
First Published Aug 14, 2017, 7:27 AM IST


வேலூர்

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பணியில் மருத்துவர்கள் இல்லாததால் விபத்தில் காயமடைந்த ஒருவரும், இதய நோயால் பாதிக்கப்பட்ட மாணவியும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். பணியில் மருத்துவர் இல்லாததால் இறந்ததை வெளியில் சொல்லாமல் நர்சுகள் இறந்தவருக்கு “ரமணா” பட பாணியில் ஈசிஜி எடுத்து சிகிச்சை அளித்துள்ளனர்.

சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் (73). இவர் சென்னையில் ரப்பர் ஸ்டாம்பு, பிரிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவரும், சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் (65) என்பவரும் ஒரு காரில் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர். காரை ராஜ்குமார் ஓட்டினார்.

கார் மதியம் 12.30 மணியளவில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பச்சகுப்பம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியதில் காரில் வந்த இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதனைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் மாவட்டம், ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு ஒரு மருத்துவர் கூட பணியில் இல்லை. நர்சுகளே முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் தாலுகா காவலாளர்கள் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் படுகாயம் அடைந்த இருவரில் ராஜ்குமார் என்பவர் இறந்து விட்டது பணியில் இருந்த நர்சுகளுக்கு தெரியவந்தது.

மருத்துவர் சொல்லாமல் எதுவும் தெரிவிக்க கூடாது என்ற காரணத்தால் நர்சுகள், விஜயகாந்த்தின் “ரமணா” படத்தில் இறந்து போன ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதுபோல, அரசு மருத்துவமனையில் இறந்துபோன ராஜ்குமாருக்கு ஈ.சி.ஜி. எடுத்து சிகிச்சை அளிப்பது போல காட்டிக் கொண்டனர்.

இதனிடையை விபத்து குறித்து அறிந்த சந்தானத்தின் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து அவரை மேல் சிகிச்சைக்காக தனியார் அவசர ஊர்தி மூலம் வேலூருக்கு அழைத்துச் சென்றனர்.

அதன்பிறகுதான் மற்றொருவரான ராஜ்குமார் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த மக்களும், இந்து மக்கள் கட்சியினரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் திரண்டனர்.

இதேபோல நேற்று மதியம் ஒரு மணியளவில் ஆம்பூர் அருகே இராளகொத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரது மகள் வைஷ்ணவியும் (13) இதய நோய் பாதித்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

வைஷ்ணவி அங்குள்ள ஒரு பள்ளியில் 8–ஆம் வகுப்பு படித்து வந்தாள். மருத்துவர் இல்லாத காரணத்தால் அந்தச் சிறுமியும் மருத்துவ சிகிச்சை செய்ய ஆளில்லாமல் மாலை 4 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் மேலும் கொதித்து எழுந்த மக்களும், இந்து மக்கள் கட்சியினரும் அரசு மருத்துவமனையின் நுழைவு வாயில் கதவைப் பூட்டிப் போராட்டம் நடத்தினர்.

பணியில் இல்லாத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், ஆஸ்பத்திரிக்கு தேவையான கூடுதல் டாக்டர்களை நியமிக்கக்கோரியும் அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் நகர காவலாளர்கள், மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் சாந்தி ஆகியோர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டம் நடத்தியவர்களிடம், “நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios