அ.தி.மு.க. ஆட்சியின் போது திருப்பதி ஏலுமலையான் கோயில் நிர்வாகம் மதுரை ஆவினிலிருந்து 135 டன் நெய் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் போட்டது

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வீட்டுக்கு நெய், வெண்ணெய் கொடுத்ததாக எக்கச்சக்க பணத்துக்கு கணக்கு எழுதியுள்ளனர் ஆவின் அதிகாரிகள். இது குறித்து ராஜேந்திரபாலாஜியின் வீடுகள் மற்றும் உறவினர் வீடுகளில் மீண்டும் ரெய்டு நடத்துவதோடு, இந்த கணக்கை எழுதியிருக்கும் அதிகாரிகளிடமும் தீர விசாரிக்க வேண்டும்.” என்று தமிழக முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு தடாலடி மனு ஒன்று வந்துவிழுந்தது சில தினங்களுக்கு முன்.

இந்நிலையில், மதுரை ஆவின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஆவின் தணிக்கை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் மீண்டும் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல் உருவாகலாம்! அவர் மீது வழக்குகள் பதிவாகலாம், அவர் கைதே செய்யப்படலாம்! எனும் பரபரப்பு கிளம்பியுள்ளது.

இந்த ரெய்டின் போது வெளியான முறைகேடுகளில் சிலவற்றைப் பேசும் அதிகாரிகள் “கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது திருப்பதி ஏலுமலையான் கோயில் நிர்வாகம் மதுரை ஆவினிலிருந்து 135 டன் நெய் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி அனுப்பி வைக்கப்பட்ட நெய்யில் இரண்டு லோடுகளை ‘தரமில்லை’ என்று திருப்பி அனுப்பியது கோயில் நிர்வாகம். அந்த நெய் நேராக மதுரை ஆவினுக்கு வராமல், ஒட்டன் சத்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு சில அதிகாரிகள் அதை இறக்கி, வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்துள்ளனர். 2019ம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை உள்ள கணக்குகளை ஆய்வு செய்ததில் 30 டன் வெண்ணெய் குறைந்திருப்பதாக கணக்கு காட்டி திருப்பதிக்கே நாமம் போட்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் தீர விசாரித்தால், டன் டன்னாக பதுக்கப்பட்ட நெய், வெண்ணெய் ஆகியன எங்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டன என்பதும், அதன் மூலம் எந்தெந்த அதிகாரிகள் எவ்வளவு பணம் சுருட்டினார்கள் என்பதும், இதில் ராஜேந்திர பாலாஜிக்கு பங்கு பணம் போனதா என்பதும் தெரிய வரும்.” என்கிறார்கள்.

ஏழுமலையானுக்கே நாமமா?