Asianet News TamilAsianet News Tamil

“அய்யா... கெணத்தைக் காணோம்...” வடிவேலு பட பாணியில் பல லட்சத்தை ஆட்டையைப் போட்ட அதிகாரிகள்...

dharapuram people ask where isthe pond questions
dharapuram people ask where isthe pond questions
Author
First Published May 29, 2018, 2:49 PM IST


குளம் வெட்டாமலேயே, அதற்கான அரசுப் பணத்தை கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

'கெணத்தைக் காணோம்...''இந்தப் பக்கம் ஐநூறு தென்னை.. இந்தப் பக்கம் ஐநூறு வாழை...' 'வட்டக் கிணறு... வத்தாத கிணறு' அத காணோம், நீங்கதான் கண்டுபிடித்து கொடுக்கணும்” என  ’கண்ணுக்கு கண்ணாக’ திரைப்படத்தில் கிணறு வெட்ட வங்கியில் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெட்டிய கிணற்றை காணவில்லை என நடிகர் வடிவேலு காவல் நிலையத்தில் புகார் அளிப்பார். இதேபோல் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே ஒரு சம்பவம் நடந்துள்ளது.
2017 – 2018ஆம் ஆண்டில் நஞ்சியம்பாளையம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் புதிதாக ஒரு குளம் அமைத்ததாகவும், அதற்காக 4 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் தணிக்கை அறிக்கை வெளியாகியுள்ளது.

அப்பகுதியில் குளம் அமைக்கும் பணி ஏதும் நடைபெறாமல் இருக்கும் நிலையில், இந்தத் தகவலை அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கிராம மக்கள் குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு செய்து, அங்கு குளம் வெட்டாததற்கான சான்றிதழை கிராம நிர்வாக அலுவலரிடம் வாங்கினர்.

இதனைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் பழனிசாமியிடம் "குளத்தைக் காணவில்லை, கண்டுபிடித்துத் தருமாறு" புகார் மனு ஒன்றை அளித்தனர். 

மேலும், போலி ஆவணம் தயாரித்து அரசுப் பணத்தை கையாடல் செய்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் குளத்தை கள ஆய்வு செய்தது போன்று சான்று வழங்கிய அலுவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு ஊரக வளர்ச்சித் திட்ட முகமை இயக்குனர் ரமேஷிற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios