Asianet News TamilAsianet News Tamil

உஷார் மக்களே..இதனை மீறினால் கடும் நடவடிக்கை பாயும்..எச்சரிக்கை விடுத்த டிஜிபி..

மத்திய, மாநில அரசு சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

DGP Sylendra Babu Announcement
Author
Tamil Nadu, First Published Jan 20, 2022, 8:37 PM IST

இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ''சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 05.01.2022 அன்று வழங்கிய நீதிப் பேராணையின்படி மத்திய, மாநில அரசு சின்னங்களை முன்னாள் நாடளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், பல்வேறு ஆணையங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் பலர் அரசு சின்னங்களைத் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர்கள், கொடிகள், பெயர்ப் பலகைகள் மற்றும் கடிதங்களில் தவறாகப் பயன்படுத்துவதாக நீதிமன்றத்திற்குத் தெரியவந்ததால் உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது.

மத்திய அரசு சட்டங்கள் சின்னங்கள் மற்றும் பெயர்கள் (தவறாகப் பயன்படுத்துதல்) தடைச் சட்டம் 1950 மற்றும் விதிகள் 1982, இந்திய அரசு சின்னங்கள் (தவறாகப் பயன்படுத்துதல்) தடைச் சட்டம் 2005-இன்படி அரசு சின்னங்களை அனுமதியின்றித் தவறாகப் பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் காவல்துறையினரால் எடுக்க சட்ட வழிமுறைகள் உள்ளன.

அரசு விதிகளின்படி, அனுமதிக்கப்பட்ட பதவியில் உள்ள முக்கிய நபர்கள்/அதிகாரிகளைத் தவிர மற்றவர்கள் அரசு சின்னங்களைப் பயன்படுத்தக் கூடாது. ஓய்வுபெற்ற அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் அரசு அதிகாரிகள், அரசு சின்னங்களைத் தங்கள் வாகனம் முத்திரை, லெட்டர் பேடு மற்றும் விசிட்டிங் கார்டுகளில் பயன்படுத்தக் கூடாது.

இச்சட்டங்கள் மீறப்படும்போது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். காவல்துறையினர் குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கலாம். மேலும் வாகனங்களில் பதிவு எண் பலகைகளில் அல்லது வாகனத்தின் வேறு பகுதியில் அரசு சின்னங்கள் மற்றும் பெயர்களைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது பிரிவு 177 மோட்டார் வாகனச் சட்டம் 1988 மற்றும் பிரிவு 50, 51 மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-இன் படி நடவடிக்கை எடுக்க அனைத்துக் காவல்துறை அதிகாரிகளுக்கும் தமிழக காவல்துறை டிஜிபி வழங்கியுள்ளார். அதோடு அரசு சின்னத்தை சாட்சிகள் முன்னிலையில் பறிமுதல் செய்யவும் அந்த நிகழ்வைக் காணொலிக் காட்சியாகப் பதிவு செய்யவும் காவல்துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios