கோவையில் துணை சபாநாயகருக்கு சேலை, வளையல் வழங்க முயன்ற தி.மு.க.வினர் 33 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

தமிழக சட்டசபையில் கடந்த 18–ஆம் தேதி நடந்த சிறப்பு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைத்தார்.

அப்போது நடந்த அமளியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவலாளர்களால் வெளியேற்றப்பட்டார். இதற்கு திமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தார் ஸ்டாலின்.

இந்த நிலையில் பொள்ளாச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்தும் சேலை, வளையல்கள் மற்றும் பெண்களின் உடைகள், போன்ற பொருட்களை அவருக்கு வழங்கப்போவதாக திமுகவினர் கூறினர்.

அதன்படி நேற்று காலை தி.மு.க.வினர் பொள்ளாச்சியில் உள்ள துணை சபாநாயகர் அலுவலகத்திற்கு வருவதாக தெரிவித்தனர்.

இதனால், முன்னெச்சரிக்கையாக அ.தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் 100–க்கும் மேற்பட்டவர்கள் துணை சபாநாயகர் அலுவலகத்தில் திரண்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இருதரப்பினரும் மோதி கொள்வதை தடுக்க காவல் துணை கண்காணிப்பாளர்கள் முத்துராஜன், நீலக்குமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான காவலாளர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் தி.மு.க. நகர செயலாளர் தென்றல் செல்வராஜ் வீட்டு முன் தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டனர். மேலும் ஒரு தட்டில் சேலை, ஜாக்கெட், வளையல், பொட்டு, பூ மற்றும் பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள் வைக்கப்பட்டன.

தி.மு.க. தொண்டர் ஒருவர் சேலை அணிந்து, பொள்ளாச்சி ஜெயராமன் போன்ற முக கவசத்தை அணிந்திருந்தார்.

அதைத் தொடர்ந்து தி.மு.க. நகர செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் சேலை மற்றும் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த தட்டுடன் தி.மு.க.வினர் ஊர்வலமாக துணை சபாநாயகர் அலுவலகத்திற்கு செல்ல முயன்றனர்.

அப்போது அவர்கள் சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் சசிகலாவிற்கு எதிராக முழக்கங்ககளை எழுப்பினார்கள்.

இதையடுத்து காவலாளர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை தடுத்து நிறுத்தி 33 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் காரணமாக தி.மு.க. நகர செயலாளர் வீடு உள்ள குமரன் நகர் பகுதி பரபரப்புடன் இருந்தது.