தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல், வேகமாக பரவி வருகிறது. சென்னை, கோவை, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பலர் இறந்துள்ளனர். இதில், சிலர் டெங்கு காய்ச்சலால் இறந்ததாக கூறப்படுகிறது ஆனால், மருத்துவமனை நிர்வாகம், சாதாரண காய்ச்சல் என கூறி வருகிறது.

இதையொட்டி, நெல்லை மாவட்டம் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 50க்கு மேற்பட்ட பொதுமக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே குறிப்பன்குளம் இசக்கி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு 5 மகள்களும், முத்துவேல் ராஜன் (16) என்ற மகனும் உள்ளனர். முத்துவேல் ராஜன், ஆலங்குளம் அருகே நல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த ஒரு வாரமாக முத்துவேல் ராஜனுக்கு, காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் குறிப்பன்குளம் அருகே உள்ள நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் 2 நாட்களுக்கு முன்பு முத்துவேல் ராஜனுக்கு காய்ச்சல் அதிகமானதால் ஆலங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐ கிரவுண்டு அரசு மருத்துவமனையில்  அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி முத்துவேல் ராஜன் பரிதாபமாக இறந்தார்.

முத்துவேல் ராஜன் டெங்கு காய்ச்சலால் இறந்ததாக பெற்றோரும், உறவினர்களும் கூறுகின்றனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அதை மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.