தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் டெங்கு காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது. 

தமிழகத்தின் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கேரள மாநில எல்லையில் உள்ள கோவை, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் டெங்குவின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர், மற்ற மாவட்டங்களுக்கும் இது பரவத் தொடங்கியது. தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக டெங்கு பாதிப்பு இருந்து வருகிறது.

கொசுக்களை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் ஒழிக்க உத்தரவிடக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். 

இதுகுறித்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் டெங்கு காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது. 

திருப்பூரில் 4 பேரும், கோவையில் 3 பேரும், ஈரோட்டில் 3 பேரும், நாமக்கல்லில் ஒருவரும், நெல்லையில் ஒருவரும், கரூரில் ஒருவரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும், நடமாடும் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் முதன்மை செயலாளர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனுதாக்கல் செய்துள்ளார். 

மேலும் இதர காய்ச்சலால் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இதுகுறித்த வழக்கை செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.