கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் 204 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது என்று தகவல் தொழில்நுட்பத் துறையின் அரசு முதன்மைச் செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான  டி.கே. ராமச்சந்திரன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகளை  நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் தகவல் தொழில்நுட்பத் துறையின் அரசு முதன்மைச் செயலரும்,  மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான  டி.கே. ராமச்சந்திரன்.

அவர், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று பல்வேறு வார்டுகளைப் பார்வையிட்டார். பெண்கள் வார்டு, ஆண்கள் வார்டு, குழந்தைகள் நலப்பிரிவு ஆகியவற்றில் நோயாளிகளைச் சந்தித்து மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரையும்  பார்வையிட்டு, உரிய சிகிச்சைகளை வழங்கிட மருத்துவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம், “கன்னியாகுமரியில் ஒவ்வொரு துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், சுகாதாரப் பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. 

இம்மாவட்டத்தில்  ஆகஸ்ட் மாதத்தில் 141 தனியார் மருத்துவமனை மற்றும் 19 அரசு மருத்துவமனைகளில் 4838 நபர்கள் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 204 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த  மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்  கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” என்று கூறினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர்  சோ.இளங்கோ,  கூடுதல் ஆட்சியர்  ராகுல்நாத்,  உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)  மாடசாமி சுந்தர்ராஜ்,  துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்)  எம். மதுசூதனன், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராதாகிருஷ்ணன்,  பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர் ஆதார அமைப்பு) சுப்பிரமணியன் உள்ளிட்ட  அலுவலர்கள் பங்கேற்றனர்.