வேலூர்

தமிழகத்தில் வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சவ்வாது மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வேலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2006-ஆம் ஆண்டு வன உரிமை சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தி, மலைவாழ் மக்களுக்கு நிலப் பட்டா உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டன. 

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இந்தச் சட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த 2.2.2016-ல் உச்ச நீதிமன்றம் நீக்கிவிட்டது. அதன் பிறகும், இதுவரை இந்த சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தவில்லை. 

எனவே, தமிழகத்தில் வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தி வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் சவ்வாது மலைவாழ் மக்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்தச் சங்கத்தின் தலைவர் ஆர்.ஏ.லட்சுமணராஜா, செயலாளர் எல்.ஜெயராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். 

மாநில விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.சண்முகம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான டில்லி பாபு, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சக்திவேல் ஆகியோர் இதில் கலந்து கொண்டு சிறப்பு ஆற்றினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பத்தூர் வட்டச் செயலாளர் ஏ.ஞானசேகரன் நன்றித் தெரிவித்தார்.