Asianet News TamilAsianet News Tamil

வங்கி மூலம் பிரமுகர்களுக்கு ரூ.50 கோடி பரிமாற்றம் - அதிர்ச்சியில் வருமானவரித்துறை

demonetisation currency-hs8bnu
Author
First Published Dec 27, 2016, 10:38 AM IST


கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய பணத்தை யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தீர்கள் என்ற விவரத்தை ஆதாரத்துடன் வழங்கும்படி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகம், அவரது சகோதரர் சீனிவாசலு, நண்பர் பிரேம் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில் ரூ.200 கோடி மற்றும் 200 கிலோ தங்கம் சிக்கியது. அதில் ரூ.35 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன.

demonetisation currency-hs8bnu

இந்த நோட்டுகள் தெலங்கானா, ஆந்திரா, தமிழகத்தில் உள்ள பல வங்கிகளில் இருந்து பெருமளவில் மாற்றப்பட்டது தெரியவந்தது. மத்திய அரசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு தலா 130 கோடி வரை விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக கொடுத்தது. இந்தப் பணத்தில்தான் பெரிய அளவில் முறைகேடுகளை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, சேலம், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதனால் பணம் மாற்றத்துக்கு உதவிய ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் சிக்குவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் சிபிஐ ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், மதுரையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனப். மதுரை வடக்கு வெளி வீதியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளது. மதுரை, தேனி மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு இவ்வங்கியே தலைமை அலுவலகமாக செயல்படுகிறது. சுமார் 40 கிளைகள் வரை உள்ளன.

demonetisation currency-hs8bnu

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த பின்பு, கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் இவ்வங்கி கிளைகள் மூலமாக, ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டதாக ரகசிய தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, மதுரையை சேர்ந்த ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்களுக்கு 50 கோடிக்கும் மேல் பணம் மாற்றி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கடந்த 22ம் தேதி மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறையினர் ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். வங்கியின் தலைவரும், மாநகர் அவைத் தலைவருமான துரைப்பாண்டியனிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அங்கிருந்து சில ஆவணங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இங்குள்ள கம்ப்யூட்டர் மூலம் மதுரை, தேனிமாவட்டங்களில் உள்ள கிளைகள் மூலம் எவ்வளவு பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளது என்ற விவரங்களை அவர்கள் சேகரித்து சென்றதாக தெரிகிறது. இது ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஓரிரு நாளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

demonetisation currency-hs8bnu

சேகர் ரெட்டியிடம் நடத்திய விசாரணையில், கருப்பு பணமாக வைத்திருந்த பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளை கோடிக்கணக்கில் மொத்தமாக மாற்றியது தெரியவந்தது. மேலும், தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் பெருமளவு பணம் மாற்றிக் கொடுத்ததும் தெரிந்தது.

மதுரையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் மூலம் மதுரையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி மூலமும் பணம் மாற்றப்பட்டது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து, மத்திய அமலாக்க துறையினர் மற்றும் வருமான வரித் துறையினர் இணைந்து மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சுமார் மூன்றரை மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

அதேநேரத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் ‘‘மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய நிதி யாருக்கு? எவ்வளவு? கொடுத்தீர்கள். கொடுத்த பணத்திற்கு ஆதாரங்கள் என்ன வைத்துள்ளீர்கள் என்ற விவரங்களை உடனடியாக வருமான வரித்துறைக்கு வழங்கும்படி’’ நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால், மேலும் பல வங்கி அதிகாரிகள், ஆளும் கட்சி விஐபிக்கள், கூட்டுறவு வங்கிகளின் தலைவர்களாக உள்ள ஆளும்கட்சி பிரமுகர்கள் சிக்குவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios