நாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள பெரும்புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவள்ளூரில் போராட்டம் நடத்தினர்.

இதில் ரூ. 500, 1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு இரத்து செய்துவிட்டு, கருப்புப் பணத்தை பெருமளவில் முடக்கி வைத்துள்ள பெரும்புள்ளிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் பணப்புழக்கம் இயல்பு நிலைக்கு திரும்பும்வரை, பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

இந்தக் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் எழிலரசன் தலைமை வகித்தார். மத்திய குழு உறுப்பினர் அ.சௌந்தர்ராஜன், மாநில குழு உறுப்பினர் ப.சுந்தரராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.பன்னீர்செல்வம், செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், மோகனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.