அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவை திருமணம் செய்து கொண்ட ராமசாமியின் இரண்டாவது மனைவி சத்யபிரியா மீது, அவரது முதல் மனைவியின் மகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கும் நாடாளுமன்ற சட்ட ஆலோசகராக கூறப்படும் ராமசாமி என்பவருக்கும் டெல்லியில் உள்ள லலித் ஓட்டலில் மார்ச் 26-ந் தேதி மறுமணம்
நடைபெறுவதாக பரபரப்பு தகவல் வெளியானது. இது தொடர்பான திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ராமசாமி
என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்ய சசிகலா புஷ்பா ஏற்பாடு செய்து வந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த ராமசாமியின் இரண்டாவது மனைவி சத்யபிரியா மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த  வழக்கில் குடும்ப நல நீதிமன்றம், ராமசாமி
வேறு பெண்ணை திருமணம் செய்ய தடை விதித்தது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி சசிகலா புஷ்பாவுக்கும் ராமசாமிக்கும் டெல்லியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர். 

இந்த நிலையில், ராமசாமியின் முதல் மனைவியின் மகள் அஞ்சலி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு சத்தியபிரியா மீது புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில், முதல்
மனைவியின் மகளான அஞ்சலியை, சத்திய பிரியா கொடுமைப்படுத்தியதாக கூறப்பட்டிருந்தது. அந்த புகாரின்மேல், தற்போது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு
செய்துள்ளதாக கூறப்படுகிறது.