டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட மயிலாடுதுறை எம்பி சுதாவிடம் மர்ம நபர் செயின் பறிப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்து, 4 சவரன் தங்கச் சங்கிலியை மீட்டுள்ளனர்.

MP Sudha chain snatching : டெல்லியில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எம்பிக்கள் குவித்துள்ளனர். அந்த வகையில் தமிழக எம்பிக்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். கடந்த 4 ஆம் தேதி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த மயிலாடுதுறை எம்பி சுதா மற்றும் திமுக எம்பி சல்மா ஆகியோர் காலையில் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது பைக்கில் ஹெல்மேட் அணிந்து வந்த மர்ம நபர் எம்பி சுதாவின் கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுதா உதவிக்கேட்டு கத்தியுள்ளார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு இல்லம் திரும்பும் வழியில் டெல்லி போலீசாரிடம் புகார் தெரிவித்து இருந்தார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் கடிதம் எழுதிய சுதா, ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற போது தன்னுடைய கழுத்திலும் லேசான காயம் ஏற்பட்டதாக தெரிவித்து இருந்தார். உயர் பாதுகாப்பு பகுதியில் இந்த குற்ற சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் போலீசார் குற்றவாளியை கைது செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளியைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 4 சவரன் தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.