டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி, மும்பை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு.

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நுழைவு வாயில் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லியில் உஷார்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகம், டெல்லி விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியைத் தொடர்ந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் அம்மாநிலத்தில் முக்கிய இடங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக சென்னை எழும்பூர், சென்டிரல் ரயில் நிலையங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவை ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை மற்றும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.