சிங்கக்குட்டி களமிறங்க வேண்டும்….போர்க்கொடி உயர்த்தும் தீபா ஆதரவாளர்கள்…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுக வுக்கு தலைமை தாங்குவது யார்? என்ற சர்ச்சை நிலவி வருகிறது. கட்சியிலும், ஆட்சியிலும் பதவி வகிப்பவர்கள் சசிகலாவை தலைமைக்கு முன்நிறுத்தி வருகின்றனர்.

ஆனால் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. குக்கிராமங்கள் முதல் பெரு நகரங்கள் வரை தீபாவுக்கு ஆதரவாக வைக்கப்பட்டுள்ள பேனர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

திருப்பூர் ,ரங்கநாத புரம் அதிமுக கிளைக்கழகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் குட்டி சிங்கம் தீபா உடனடியாக களமிறங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தீபாதான் அ.தி.மு.க. பொதுச் செயலராக வேண்டும் என திருப்பூரில், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

கடலுாரில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பேனரில் 147 பேரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் பதவி சுகம் அனுபவித்துவரும் கழக நிர்வாகிகள் பதறிப் போயுள்ளனர்.

இதே போல் தஞ்சாவூர்,மன்னார்குடி,திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தீபாவுக்கு ஆதரவாக வைக்கப்பட்டுள்ள பேனர்களும், வால் போஸ்டர்களும் அதிமுக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் உச்சகட்டமாக ஓபிஎஸ் சின் சொந்த தொகுதியான போடியை அடுத்த சீலையம்பட்டியில் வைக்கப்பட்டிருந்த பேனர் பேரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பேனரில் கொள்ளை கூட்டத்தின் கூடாரத்திற்கு அடிமையாகி விட்டார்கள்; ஆட்சிக்கு அம்மா அடையாளம் காட்டியவரை அகற்ற நினைக்கும் கும்பலை ஒழிக்க, கட்சியையும் அம்மாவின் இரட்டை இலையையும் காப்பாற்ற வாருங்கள் என எழுதப்பட்டிருந்தது.

ஆனால் பேனர் வைக்கப்பட்ட சற்று நேரத்தில் போஸீசார் இதனை உடனடியாக அகற்றினர். தமிழகம் முழுவதும் தீபாவுக்கு ஆதரவாக முளைக்கும் பேனர்கள் ஆளும் வர்க்கத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.