deepa request chennai police to allow homage in marina
இலங்கையில் இன படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு, மெரினா கடற்கரையில் நினைவஞ்சலி செய்ய போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனை அனுமதிக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அறிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தீபா, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2009 ம் ஆண்டு மே மாதம் இலங்கையில், லட்சக்கணக்கானத் தமிழர்களை சிங்கள அரசு கொடூரமாக கொன்று குவித்தது.
குறிப்பாக குழந்தைகள், கர்ப்பணிப் பெண்கள் உள்பட வயது வித்தியாசம் இல்லாமல் கண்முடித்தனமாக ராணுவத்தை ஏவி கொலை செய்தது.
உலகம் முழுவதும் தடை செய்த குண்டுகளை வீசியும், பீரங்கி குண்டுகளை வீசியும் இனப்படுகொலை சிங்கள அரசு செய்தது. ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் கற்பு சூறையாடப்பட்டு கொல்லப்பட்டனர்.
இந்த இனப்படு கொலைக்கு, அப்போது ஆட்சியில் இருந்த மத்திய காங்கிரஸ் அரசும், தமிழகத்தில் ஆட்சி செய்த திமுகவும் துணைபோனது.
கடந்த 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, இலங்கையில் நடந்த இனப்படு கொலையை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். மேலும், ராஜபக்சேவை யுத்த குற்றவாளி என அறிவித்து தண்டிக்கப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.
இலங்கையில் இனப்படுகொலையை எதிர்த்தும் அப்போரில் இறந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் தமிழ் உணர்வாளர்கள் சென்னை மெரினா கடற்கரையில் நடத்தி வருகிறார்கள்.
தற்போது அந்த நினைவேந்தல் புகழ் அஞ்சலி வீரவணக்கம் நிகழ்ச்சிக்கு சென்னை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
கடந்த காலங்களில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கினார். அதேபோல், தொடர்ந்து அனுமதி வழங்க சென்னை மாநகர காவல் துறைக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
