காதை பிளக்கும் அளவுக்கு பேருந்தில் பாடல் ஒலிக்கப்பட்டதை, பயணிகள் சத்தத்தை குறைக்க சொன்னதற்கு, சத்தத்தை குறைக்க முடியாது என்று கூறி பேருந்தை இயக்கிய அரசு டிரைவர், கண்டக்டர் மீது பயணிகள் புகார் கொடுத்துள்ளனர்.

இது குறித்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் கூறுகையில், என் பெயர் அருள். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படித்து வருகிறேன். எப்போதும் போல நானும் எனது நண்பர்களும், கல்லூரி முடிந்து கானாவிலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில்
இருந்து ஏறினோம். செங்கோட்டையில் இருந்து கம்பம் செல்லும் அரசு பேருந்து அது. வண்டி எண்.TN57 N1287. பேருந்தில் ஏறியதும் காதைப் பிளக்கும் வகையில் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. 

கானாவிலக்கில் ஏறிய நாங்கள், புது பஸ் டாண்டிக்கு 10 ரூபாயை கண்டக்டரிடம் கொடுத்து புது பஸ் ஸ்டாண்ட் என்று சொன்னோம். பாட்டு சத்தத்தில் அவருக்கு நாங்கள் சொல்வது புரியவில்லை. பின்னர் சத்தமாக கூறினோம். பிறகுதான் டிக்கெட் கொடுத்தார். 

பாடல் மிகுந்த சத்தத்துடன் ஒலித்துக் கொண்டிருந்ததால், பலர் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர். இதனால், பாடலின் சத்தத்தை குறைக்க கண்டக்டரிடம் கூறினோம். ஆனால், அதற்கு அவர், டிரைவரிம் போய் சொல்லுங்கள் என்றார்.

உடனே நாங்கள், டிரைவரிடம் போய் சத்தத்தைக் குறைக்கச் சொன்னோம். அதற்கு டிரைவர், காலையில் இருந்து பேருந்து ஓட்டிக்கிட்டு இருக்கேன். பாட்டு இல்லைன்னா தூங்கிடுவேன் என்று கூறினார். சரி சத்தத்தை குறையுங்கள் என்று கூறினோம். அதற்கு அவர் சத்தத்தை குறைக்க முடியாது என்று
சொல்லிவிட்டார். 

அதற்குள் பேருந்தில் இருந்த பலர் கண்டக்டரிடம் சத்தத்தை குறைக்கச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கண்டக்டரும் முடியாது என்றே கூறினார்.  உடனே பேருந்து டிப்போவுக்கு தொடர்பு கொண்டு இது குறித்து கூறினோம். அங்கிருந்த அதிகாரி ஒருவர், கண்டக்டரிடம் போனில் பேசினார். அதற்கு கண்டக்டர் அந்த அதிகாரியிடமும் பாடலின் சத்தத்தை குறைக் கமுடியாது என்று கூறியுள்ளார்.

அதற்குள் புதிய பேருந்து நிலையத்தை நாங்கள் அடைந்து விட்டோம். அங்கிருக்கும் அதிகாரியிடமும் இது குறித்து கூறினோம். கண்டக்டர், டிரைவரிடம் இது குறித்து பேசினார்கள். இதன் பின்னரே பாடலின் சத்தம் குறைக்கப்பட்டது. அதற்குள் பலர், பஸ்சை விட்டு இறங்கி வேறு பஸ்சில் ஏறிச் சென்று விட்டனர்.
இதனால் அந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.