அரியலூர்
 
கல்லணை முதல் கீழணை வரை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூர் மாவட்டம், திருமானூரில் கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழு மற்றும் அனைத்து அரசியல் கட்சி விவசாய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு கொள்ளிடம் நீர் ஆதார பாதுகாப்பு குழு ராஜேந்திரன் தலைமை வகித்தார். தனபால், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கைலாசம் வரவேற்றார். 

இந்தக் கூட்டத்தில் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் நிரந்தரமாக அரசு மணல் குவாரியை திறக்க முயன்றால் அடுத்து என்னென்ன போராட்டங்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில், "கொள்ளிடம் ஆற்றில் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்களையும், கடந்த 20 ஆண்டுகளாக மணல் குவாரி அமைத்து அதிக ஆழத்தில் மணல் எடுக்கப்பட்டதாலும் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் கீழே போய்விட்டது. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. 

எனவே, நீரை சேமிப்பதற்கு ஆதாரமாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க கூடாது. 

மேலும், எட்டு மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும்.

எனவே, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதை அரசு கைவிட்டு கல்லணை முதல் கீழணை வரை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், பா.ஜ.க. விவசாய அணியை சேர்ந்த செல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் புனிதன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இளைஞரணியை சேர்ந்த ஜெயபிரகாஷ், 

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தங்க தர்மராஜன், த.மா.கா.வை சேர்ந்த கற்பகம், தே.மு.தி.க.வை சேர்ந்த ஜெயபாலன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கண்ணன், விவசாய சங்கம் மணியன் மற்றும் கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர் பங்கேற்றனர்.