decision had taken for farmer protest by ayyakannu

டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் 40 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

வறட்சி நிவாரணம், வங்கி கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்று வந்தது.

அரை நிர்வாண போராட்டம், எலி தின்னும் போராட்டம், சாட்டியடி போராட்டம், அரை மொட்டை அடிக்கும் போராட்டம் என தினமும் ஒவ்வொரு விதமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து சென்றனர்.

இதனிடையே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேகொண்டு வருகிறேன். எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என கேட்டு கொண்டார்.

அதற்கு பதிலலளித்து பேசிய அய்யாக்கண்ணு, எங்களுக்கு உறுதிமொழி கடிதம் வேண்டும் என்றும் அதுவரை நாங்கள் போராட்டமும் நடத்த மாட்டோம், வீட்டிற்கும் செல்ல மாட்டோம், இங்கயே அமைதியாக அமர்ந்திருப்போம் என தெரிவித்தார்.

இதையடுத்து மத்திய அரசு பெரிதாக கண்டுகொள்ள வில்லை. இந்நிலையில், வரும் 25 ஆம் தேதி தமிழக விவாசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சியினர் பங்கேற்கும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டம் அண்ணா அறிவாலையத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தை நிறுத்தி விட்டு தமிழகத்தில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இதைதொடர்ந்து 40 நாட்களாக நடைபெற்று வந்த டெல்லி போராட்டம் ஒரு முடிவுக்கு வருகிறது. ஸ்டாலின் அழைப்பை ஏற்று விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இந்த அறிவிப்பை தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை நேரில் வந்து பேசியவுடன் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்துள்ளார்.