பெட்ரோல் நிலையங்களில் டெபிட் கார்டு மீதான சர்வீஸ் சார்ஜ் ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் இன்று முதல் ஏற்க இயலாது என்று பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. ஆனாலும், மத்திய அரசு தலையிட்டதை தொடர்ந்து தங்களின் முடிவை வரும் 13ம் தேதி வரை ஒத்தி வைத்துள்ளனர். பெட்ரோல் நிலைய பணமில்லா பரிமாற்றங்களுக்கு சேவைக்கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் வசூலிக்கும்போது, அதை கையாளுவதற்காக ஒரு விழுக்காடு வரை வங்கிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாகவும், இதை தங்களால் செலுத்த முடியாது என்பதால் இம்முடிவை எடுத்திருப்பதாகவும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் விளக்கமளித்திருக்கிறது.

ஆக பணமில்லா பரிமாற்றத்துக்கு வங்கிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருப்பது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்பது தெளிவாகிறது.

இந்தியாவில் பணத்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தீருவதற்கு முன்பாகவே தானியங்கி பணம் வழங்கும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கும், பிற பணமில்லா பரிவர்த்தனைகளுக்கும் மீண்டும் கட்டணம் வசூலிக்க தொடங்கியிருப்பது குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் விரிவாக விளக்கியிருந்தேன். அதற்குள்ளாகவே இப்படி ஒரு சிக்கல் வெடித்திருப்பதில் இருந்தே அரசின் நடவடிக்கையால் ஏற்படும் மோசமான விளைவுகளை உணர முடியும்.

ஒரு நிறுவனம் அது வழங்கிய பொருள் அல்லது சேவைக்கான டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் பெறும் போது, அந்த அட்டையில் இருந்து பணத்தை எடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கணக்கில் செலுத்துவதற்காக வங்கிக்கு வாடிக்கையாளர் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்.

அத்தொகைக்கு வணிகர் சேவைக்கட்டண விகிதம் (Merchant Discount Rate-MDR) என்று பெயர். நீண்டகாலமாகவே இந்தக் கட்டணம் வசூலிக்கப்படும் போதிலும், பெட்ரோல் நிலையங்களுக்கு மட்டும் இந்த சேவைக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடந்து பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், அதை சமாளிக்க வசதியாகவும், பணமில்லா பரிமாற்றத்தை  ஊக்குவிக்கவும் வசதியாக வணிகர் சேவைக்கட்டணம் திசம்பர் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு இருந்தது. ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இந்தக் கட்டணம் மீண்டும் வசூலிக்கப்படும் நிலையில், பெட்ரோல் நிலைய பரிமாற்றங்களுக்கும்  இனி சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன. இது தான் பெட்ரோல் நிலைய ஒத்துழையாமை அறிவிப்புக்கு முக்கியக் காரணமாகும். 

பணமில்லா பரிமாற்றம் என்ற இலக்கை பயணத்தை தொடங்கியிருப்பதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அதற்காக சில சலுகைகளை வழங்க வேண்டும். மின்னணு பரிமாற்றத்தின் மூலம் செலுத்தப்படும் பணத்திற்கு 1% முதல் 2% வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தால், அது பலரையும் பணமில்லா பரிவர்த்தனைக்கு அழைத்து வரும். அப்படி எந்த சலுகையையும் அறிவிக்காமல் பெட்ரோல் நிலைய பரிமாற்றங்களுக்கும் சேவைக் கட்டணத்தை  நீட்டித்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

பெட்ரோல் விற்பனை நிலையங்களின் நிலைப்பாட்டில் நியாயம் இருகிறது. கடன் அட்டை மற்றும் பற்று அட்டை மூலம் பரிமாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது, பெட்ரோல் நிலையங்களுக்கும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. எனினும், பின்னர் அக்கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. மற்ற வணிகங்களுக்கு 2012 ஆம் ஆண்டு ஜூன் 28 முதல் கடந்த நவம்பர் 10 வரை ரூ.1000 வரைக்கும் 0.75 விழுக்காடும், ரூ.2000 வரை ஒரு விழுக்காடும் வசூலிக்கப்பட்டு வந்தது. அந்தக் கட்டணம் இப்போது ரூ.1000 வரை 0.25%, ரூ.2000 வரை 0.75%, ரூ.2000&க்கு மேல் ஒரு விழுக்காடு  என குறைக்கப்பட்டிருக்கிறது. மற்ற வணிகங்களுக்கான சேவைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு சேவைக்கட்டணத்தை நீட்டித்திருப்பது நியாயமல்ல.

பெட்ரோல், டீசல் விற்பனையில் பெட்ரோல் நிலையங்களுக்கு சராசரியாக 2.5% லாபம் கிடைக்கிறது. அதில் எரிபொருள் ஆவியாவதால் ஏற்படும் இழப்பு, பணியாளர் ஊதியம், மின்சாரக் கட்டணம் போன்ற செலவுகளை கழித்துவிட்டுப் பார்த்தால் 0.5% மட்டும் தான் நிகர லாபம் கிடைக்கிறது. ஆனால், ஒரு விழுக்காடு சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் பெருமளவில் இழப்பு தான் ஏற்படும். எனவே, 13&ஆம் தேதிக்குள் இந்த சிக்கலுக்கு சுமூக தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும்.

பெட்ரோல் நிலையங்களின் பிரச்னை இப்படியென்றால், மற்ற வணிகங்களுக்கு வங்கிகள் சேவைக் கட்டணம் வசூலிக்கின்றன. அந்தக் கட்டணத்தை வணிக நிறுவனங்கள் தான் செலுத்த வேண்டும் என்ற போதிலும், சட்டவிரோதமாக அக்கட்டணத்தை வாடிக்கையாளர்களின் தலையில் வணிக நிறுவனங்கள் சுமத்துகின்றன. இதனால் மின்னணு பணப்பரிமாற்றம் செய்ய நினைக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல அனைத்து பணமில்லா பரிமாற்றங்களுக்கும் கட்டணத்தை ரத்து செய்வதும், வாடிக்கையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதும் தான் தீர்வு ஆகும். இதை மனதில் கொண்டு இப்பிரச்னைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.