குரங்கணி மலை காட்டுத்தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேவி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியின் கொழுக்கு மலைக்கு திருப்பூரில் இருந்தும் சென்னையில் இருந்து 26 பெண்கள், 8 ஆண்கள், 3 குழந்தைகள் உள்பட 37 பேர் இரு குழுக்களாக சென்றுள்ளனர்.

இந்நிலையில், மலை ஏறி திரும்பும் போது அவர்கள் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் தனிதனியாக பிரிந்து சென்றுள்ளனர்.

இந்த தீ விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த மற்றும் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

அதில், நாளுக்கு நாள் உயிரிழப்பு நிகழ்ந்த வண்ணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நேற்றைய தினம் வரை 14 பேர் இந்த தீச்சம்பவத்தில் உயிரிழந்திருந்தனர். 

இந்நிலையில் இன்று இரண்டு பேர் அடுத்தடுத்து  சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தனர். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, திருப்பூரை சேர்ந்த சக்திகலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மேலும் மதுரையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேவி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.