பொறியியல் மாணவர்களுக்கான பொது கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு..! செப்டம்பரில் வகுப்புகள் தொடக்கம்- பொன்முடி
தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு வருகிற 28 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெற இருப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்

பொறியியல் கலந்தாய்வு
பொறியியல் கலந்தாய்வு தொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முதல் கட்டமாக விளையாட்டு பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 22 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து பொது கலந்தாய்வு 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வரை நடைபெறும் என கூறினார். மொத்தம் மூன்று கட்டங்களாக பொது கலந்தாய்வு நடைபெறும் எனவும் இரண்டாவது கட்டமாக ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரையும் மூன்றாவது கட்டமாக 22ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்தார்.
செப்டம்பரில் வகுப்புகள் தொடக்கம்
430 அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 738 இடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும், எந்த கல்லூரிகளிலும் காலியிடம் இல்லை என்கிற அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவித்தார். இது கடந்த ஆண்டை விட 3100 இடங்கள் அதிகம் என தெரிவித்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் 11,804 இடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும் இது கடந்த ஆண்டை விட 236 இடம் அதிகம் என குறிப்பிட்டார். செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி இயக்ககம் கலந்தாய்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில் செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்