காதல் மனைவி திவ்யா பிரிந்த காரணத்தால் இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக சிபிசிஐடி போலீசார் இறுதி அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததன் பேரில் உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளவரனுக்கும் வன்னியர் வகுப்பைச் சேர்ந்த திவ்யாவுக்கும் காதல் ஏற்பட்டு அக்டோபர் 8,2012 அன்று வீட்டை விட்டு வெளியேறி அக்டோபர் 10,2012 அன்று திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.

நவம்பர் 7ந் தேதி இரு வீட்டாரின் உறவினர்களும் தொப்பூரில் சந்தித்து பேசியபோது திவ்யா திவ்யாவின் அம்மாவுடன் செல்ல மறுத்து விடு இளவரசனுடன் சென்றார்.
இதனையடுத்து அக்கூட்டத்திற்கு வராத திவ்யாவின் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் சாதிக் கலவரமாக உருவெடுத்தது. கடந்த 2012 ஜூலை மாதம் 7 ஆம் தேதி இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு, நத்தம் காலனி, அண்ணா நகர் மற்றும் கொண்டாம்பட்டி பகுதி மக்களின் வீடுகள் மற்றும் உடைமைகளைச் சிதைத்துத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
பின்னர் சில மாதங்கள் கழித்து திவ்யாவின் தாயார் உடல்நிலை சரியில்லை என்று சென்ற திவ்யா அதன் பின்னர் இளவரசன் வீட்டுக்கு திரும்பவில்லை. நீதிமன்றத்தில் இளவரசன் வழக்கு தொடுக்க திவ்யா குழப்பமாகவே பதிலளித்தார்.
ஒருபுறம் இளவரசன் பக்கம் தலித் ஆதரவாளர்களும் , மறுபுறம் திவ்யாவின் பக்கம் வன்னியர் ஆதரவாளர்களும் என நீதிமன்றத்தில் இரு பிரிவாக செயல்பட்டதை காணமுடிந்தது.
இறுதியாக 2013 ஜூலை 3 அன்று திவ்யா உயர்நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தில் தான் இறுதி வரை தன் தாயுடனேயே வாழ விரும்புவதாகத் தெரிவித்தார். இதையடுத்து அவரது தாயாருடன் அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
திவ்யா இனி இளவரசனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று பேட்டியளித்த மறுநாள் 2013 ஜூலை 4 அன்று பகலில் இளவரசன் தர்மபுரி அரசு கலைக் கல்லூரிக்குப் பின் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக .
அருகில் மதுபாட்டில்கள் சில கிடந்தன.
இவரது இறப்பைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடற்கூறு பரிசோதனையில் தலையில் அடிபட்டு அவர் இறந்ததாக அறிக்கை வெளியானது . இளவரசன் தனது முழுகால் சட்டையில் 4 பக்க கடிதம் ஒன்றை வைத்திருந்தார், இதில் தன் மரணத்திற்கு மற்றவர்கள் காரணமில்லை என்று தெரிவித்திருந்தார்.
இளவரசன் உறவினரிடம் இருந்து இக்கடிதத்தை கைப்பற்றிய காவல்துறை இக்கடிதம் இளவரசன் எழுதியதா என்று கண்டறிய தடவியல் சோதனை சாலைக்கு அனுப்பினர், அதில் இக்கடிதத்தில் உள்ளது இளவரசன் கையெழுத்தே என்று முடிவு வந்தது.
இளவரசனின் இறப்புக்குப் பின் பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இளவரசனின் உடற்கூறு சோதனை கோயம்புத்தூர் அல்லது சென்னையில் நடைபெறவேண்டும் என்று சங்கரசுப்பு தலைமையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த நீதிமன்றம் உடற்கூறு சோதனையின் முடிவுகளையும் வீடியோ ஆதாரங்களையும் இளவரசனின் தந்தையிடம் ஒப்படைக்கவேண்டும், அவரது உடலைபாதுகாத்து வைக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.
இளவரசன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ரமேஷ் என்பவர் தொடுத்த வழக்கில், போரூர் இராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள் சம்பத்குமார் மற்றும் தங்கராஜ் ஆகியோர் தருமபுரி சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் பணித்தது.
அதன்படி அவர்கள் பரிசோதித்து அளித்த அறிக்கையில் முரண்பாடு இருப்பதாகக் கூறி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு, உடலை சென்னைக்கு எடுத்து வந்து, மறுபடியும் உடற்கூறு பரிசோதனையை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டாவது உடற்கூறு பரிசோதனை முடிந்து உடல் அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இளவரசனின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய பதவியில் உள்ள நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அரசுக்கு கோரிக்கை வைத்தார். திமுக தலைவர் கருணாநிதி உட்பட பிற கட்சித்தலைவர்களும் இக்கோரிக்கையை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் இளவரசன் இறப்புக்கான காரணம் கண்டறியப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இவரது தலைமையில் நீதிவிசாரனை நடைபெறக் கூடாது என்று இளவரசனின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இளவரசன் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என இளவரசனின் தந்தை இளங்கோ தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி கடந்த ஆண்டு நவம்பர் 25 , 2016 அன்று உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸ் தரப்பு அறிக்கை தாக்கல் செய்தது அதில் மரணம் ஏற்ப்பட்ட விதம் , உடற்கூறு ஆய்வு அறிக்கை, மரண குறிப்பை ஆய்வு செய்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டது ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது இளவரசன் மரணம் தற்கொலை என்று கூறியிருந்தது.
இதையடுத்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி அறிக்கையை ஏற்று வழக்கை முடித்துவைப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து நான்காண்டு கால வழக்கு முடிவுக்கு வந்தது.
