Danger to the Tamil Nadu government - Sendalangara Shganbaga Mannaar Jeeyar

தமிழக கோயில்களில் ஆகம விதிமீறல்கள் அதிகரித்து வருவதாகவும் இதனால், தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சிக்கு பேராபத்தாக முடியும் என்றும் மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், நேற்று ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் முறைப்படி ஆகம விதிகளை கடைபிடிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர், கோயில்களின் வரவு செலவு விவரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விவகாரங்களில் மட்டுமே இந்து சமய அறநிலையத் துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என்றும்அதைவிடுத்து வழிபாட்டு முறைகளிலோ, சம்பிரதாயங்களிலோ தலையிட அறநிலையத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குள், அண்மையில் சில கன்னியாஸ்திரிகள் பைபிலுடன் உள்ளே சென்றுள்ளனர். இது தவறான செயல். அதேபோல் கோயிலுக்குள் நுழைந்த ஒருவர், காலணியை வீசியுள்ளார். இந்த சம்பவத்தால் கோபமடைந்த அவரது தங்கை சமயபுரம் மாரியம்மனால்தான் கோயில் யானை, பாகனை கொன்றுள்ளது. கோயில்களில் ஆகம விதிமீறல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இது தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சிக்கு பேராபத்தாக முடியும் என்றார்.

கோயில் சொத்துகள் தமிழகம் முழுவதும் கேட்பாரற்று உள்ளன. உரிய அனுமதியின்றி பலர் அவற்றை அனுபவித்து வருகின்றனர். அதுபோன்ற சொத்துக்கள் அனைத்தும் உடனடியாக மீட்கப்பட வேண்டும் என்றார். கோயில்களில் கட்டண தரிசனம் செய்வது தவறான நடைமுறை என்றும், உடனடியாக அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறினார். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றம் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த எஸ்.வி.சேகர் விமர்சனம் செய்தது தவறானது என்றும் மன்னார்குடி செண்டலங்கார செண்மபக மன்னார் ஜீயர் தெரிவித்தார்.