டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை சேது எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில்களின் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் உருவான டிட்வா புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராமேஸ்வரத்தை அச்சுறுத்தும் புயல்

டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசுவதால் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. தனுஷ்கோடியில் சாலையை கடல் நீர் மூழ்கடித்தது. இதனால் தனுஷ்கோடியில் உள்ள மீனவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பொதுமக்களும் தனுஷ்கோடி செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் கடல் சீற்றம் காரணமாக மண்டபம் ராமேஸ்வரம் இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேது, அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில்கள்

ராமஸ்வரத்தில் இருந்து இன்று புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:22662) மண்டபத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோல் நாளை (29ம் தேதி) சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வ.எண்:22662) இராமநாதபுரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரம் சென்ட்ரல் அமிர்தா எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16344) ரயிலும் நாளை இராமநாதபுரத்தில் இருந்து புறப்படும்.

மதுரை, திருச்சி ரயில்கள்

இதேபோல் சென்னை எழும்பூர் விரைவு எக்ஸ்பிரஸ் (வ.எண்:16752), கன்னியாகுமரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 22621), தாம்பரம் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16104) ஆகிய ரயில்கள் நாளை (29ம் தேதி) மண்டபத்தில் இருந்து புறப்படும். திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் (வ.எண்: 16850) மானாமதுரையில் இருந்தும், மதுரை பயணிகள் உச்சிப்புளியில் இருந்தும் நாளை புறப்படும். இது தவிர புவனேஸ்வர் -ராமேஸ்வரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 20849) மண்டபத்துடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.