மிக்ஜாம் புயல்: வெள்ள நிவாரண நிதியை வங்கி கணக்கில் செலுத்த கோரி மனு!
வெள்ள நிவாரண நிதியை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, அதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும், அவருக்கும் நிவாரண தொகை ரூ.6,000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேச பாஜக முதல்வர் யார்? இன்று மாலைக்குள் அறிவிப்பு!
மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதிக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக ரூ.6,000 வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வெள்ள நிவாரண நிதியை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த உத்தரவிட கோரி செனனி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “தமிழக அரசின் நிவாரண தொகை வழங்கக்கூடிய முடிவு பாராட்டக்கூடியது. ஆனால் தமிழக அரசு நிவாரண நிதியை ரேஷன் கடைகள் மூலம் கொடுப்பதால், அதிகளவில் முறைகேடு ஏற்படும். நியாயமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. வெள்ள நிவாரண நிதியை வங்கிக் கணக்கில் செலுத்துவதால் தமிழக அரசிற்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது. பல்வேறு திட்டங்களுக்கான தொகையை அரசு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தி வரக்கூடிய நிலையில், நிவாரண நிதியையும் வங்கி கணக்கில் செலுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்.” என கோரப்பட்டுள்ளது. இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.