மிக்ஜாம் புயல்: நிரம்பும் ஏரிகள்; வெள்ள அபாய எச்சரிக்கை - பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி!
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது.
சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவில், 34 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள மிக்ஜாம், சென்னைக்கு கிழக்கு, வட கிழக்கே 90 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திராவின் நெல்லூர் - மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று இரவு வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை, பலத்த காற்று தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சூறைக்காற்றுடன் இரவு தொடங்கி தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து, ரயில் போக்குவரத்து \முடங்கியுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் பல ரயில்கள், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால், இன்று இரவு வரை விமான நிலையம் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் பல்வேறு மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மீட்பு நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கண்காணித்து வருகிறார். தமிழக அரசு சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேசமயம், தொடர் கனமழை பெய்து வருவதால், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகள் 98 சதவீதம் நிரம்பியுள்ளது. இதனால், மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து அனைத்து ஏரிகளையும் கண்காணிக்க அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆறு, ஏரிகளின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 47 ஆண்டுகளில் வரலாறு காணாத மழை: களத்தில் இறங்கும் திமுக ஐடி விங்!
முன்னதாக, கனமழை காரணமாக புழல் ஏரியின் நீர்வரத்து 8000 கன அடியாக அதிகரித்துள்ளதால், ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 4000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 10,000 கனஅடியை எட்டியதால், ஏரியிலிருந்து 6000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
அதேபோல், பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து 8,400 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், இன்று மாலை 4.30 மணியளவில் கொற்றலை ஆற்றுக்கு 1000 கன அடி நீர் திறந்துவிடப்படவுள்ளது. இதனால் கொற்றலை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் 60 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது,