ஆவின்பால் ஓட்டுநர் ஒருவரை, சுங்கச்சாவடி ஊழியர்கள் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் சென்னை சூரப்பட்டு அருகே நடந்துள்ளது.

சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் நெடுஞ்சாலையில் சூரப்பட்டு அருகே சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியாக, அம்பத்தூரில் இருந்து ஆவின்பால் வாகனம் ஒன்று சென்றுள்ளது.

சுங்கச்சாவடியில் எந்திரம் பழுதானதால், வாகனத்தை ஓரமாக நிறுத்தும்படி ஊழியர்கள் கூறியுள்ளனர். ஆவின் பால் வாகன ஓட்டுனரும், சற்று தூரம் தள்ளி நிறுத்தி உள்ளார்.

சுங்கச்சாவடி ஊழியர்கள் குறிப்பிட்ட இடத்தை விட்டு அதிக தூரத்தில் வாகனத்தை நிறுத்தியதால் அவர்கள் ஆத்திரமடைந்தனர். பின்னர், ஆவின்பால் வாகன ஓட்டுநரை அவர்கள் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். 

ஆவின்பால் வாகன ஓட்டுநர் தாக்கப்படுவதைக் கண்ட மற்ற வாகன ஓட்டுநர்கள் அவரை காப்பாற்ற ஓடி வந்தனர். இதை அறிந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். 

பின்னர், தாக்கப்பட்ட ஆவின்பால் ஓட்டுநர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, தப்பியோடிய சுங்கச்சாவடி ஊழியர்களை போலீசார் தேடி வருகின்றனர்.