கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக அறிவித்தது பலரது வயிற்றிலும் புளியை கரைத்து விட்டது.
நள்ளிரவு 12 மணிக்குள் கையிலுள்ள பணத்தை மாற்றியாக வேண்டும் என்பதால் பலரும் பரபரத்தனர். இந்த செய்தி பரவியதும் டீ கடைகள், மளிகை கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆகியவற்றில் புகுந்து பொருட்களை வாங்கினர். இதனால், நூறு ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக கைகொடுத்தவை திருமண மண்டபங்கள்தான். இன்று முகூர்த்தம் என்பதால் திருமண மண்டபங்களில், நேற்று இரவு வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் கலந்து கொள்ள வந்தவர்கள் பலரும், பிரதமரின் அறிவிப்பை கேட்டு பதற்றம் அடைந்தனர். ஆனால் புத்திசாலிதனமாக மொய் கவரில் ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களை ஓசைப்படாமல் வைத்து கொடுத்துவிட்டனர்.

மொய் பணம் வாங்குபவர்களிடமும் பணம் மாற்றுவதற்கு ஒரு கூட்டம் முண்டியடித்தது. ரூ.100, ரூ.200 மொய் எழுதுபவர்கள் சிலர், தங்கள் நண்பர்களோடு சேர்ந்து ஒரே கவரில் பெயர்களை எழுதி மொய் கவர் கொடுத்ததையும் காண முடிந்தது.
இதனால் திருமணம் நடத்துபவர்களுக்கு கூடுதல் வருமானம் என்றாலும், அந்த பணம் கையில் கிடைத்தும் அனுபவிக்க முடியாத சோகத்தையும் ஏற்படுத்திவிட்டது. இதனால் மொய் பணத்தை வைத்து மண்டப வாடகை உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்ட நினைத்தவர்கள் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர்.
